ஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையர் அறை முன்பு பொதுமக்கள் தர்ணா
ஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையர் அறை முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு பெரிய அய்யங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் தற்போது ஜிக்கா குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரிய அய்யங்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் ஆணையர் அறை முன்பு அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் பகுதியில் ஜிக்கா குடிநீர் திட்டத்துக்காக குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. இதுவரை குழாய்கள் பதிக்கப்படவில்லை. மேலும் தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அந்த குழிக்குள் விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
மேலும் குழாய்கள் பதிக்கப்படாததால் கடந்த 6 மாதங்களாக எங்கள் தெருவை சேர்ந்தவர்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஆழ்துளை கிணற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீ ரையே குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். எனவே ஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், விரைவில் குடிநீர் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story