பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தர்மபுரி,
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19-ந்தேதி வெளியானது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 20,013 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களில் 17,935 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.62 ஆகும்.
தேர்வு எழுதியவர்களில் 8,768 மாணவர்களும், 9,167 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் 96 அரசு பள்ளிகளை சேர்ந்த 12,843 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினார்கள். இவர்களில் 10,897 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.85 ஆகும். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை தெரசாள் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார். இதேபோல் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினர்.
மாணவ-மாணவிகள் தங்கள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக தங்கள் பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பிளஸ்-2- தேர்வில் பாடவாரியாக மதிப்பெண்களை மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவ-மாணவிகள் அதற்குரிய விடைத்தாள்களை பெற விண்ணப்பிக்கவும் பள்ளிகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story