தென்பெண்னை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் விடும் திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் ஊர்வலம் அரூர் உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு
தென்பெண்னை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் விடும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலமாக சென்று மொரப்பூரில் உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மொரப்பூர்,
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியில் பெரும்பாலானோர் விவசாய தொழிலை நம்பியே வாழ்ந்து உள்ளனர். இந்த பகுதியில் பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், கிருஷ்ணகிரி அணையின் வலதுபுற கால்வாயை கம்பைநல்லூர் வழியாக மொரப்பூர் வரையிலான அனைத்து கிராம ஏரிகளுக்கும் தண்ணீர் விட வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் கே.ஈச்சம்பாடி அணை கட்டில் இருந்து மொரப்பூர் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடும் திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாய சங்கங்களும், அரசியல் கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மொரப்பூர் வட்டார பாசன விவசாய சங்கம் சார்பில் முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதனிடையே இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயி ஜெயபால் என்பவர் நவலை கிராமத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் மலர்விழி நேரில் வந்து போராட்டம் நடத்திய விவசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த திட்டத்தை செயல்படுத்த அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.
இந்தநிலையில் நேற்று விவசாயிகள் சங்கத்தினர் மொரப்பூரில் கல்லாவி கூட்ரோட்டில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் வழியாக மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அரூர் உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டியிடம் அவர்கள் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர் சிவாஜி, பிரதிநிதிகள் பிரபாகரன், செந்தமிழன், தங்கராசு மற்றும் விவசாயி ஜெயபால் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story