சூளகிரி அருகே லாரிகள் மோதல்; பெண் பலி டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம்


சூளகிரி அருகே லாரிகள் மோதல்; பெண் பலி டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 April 2019 4:30 AM IST (Updated: 23 April 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே லாரிகள் மோதிய விபத்தில் பெண் பலியானார். டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓசூர், 

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழ வியாபாரிகள் 7 பேர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பழங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ஒரு மினி லாரியில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு நோக்கி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஒம்தேபள்ளி என்ற இடத்தில் நேற்று காலை 5 மணியளவில் வந்த போது முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி மீது வேகமாக மோதியது.

இதில் மினி லாரியின் முன்பக்கம் நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கத்தை சேர்ந்த பழனிவேலு என்பவரது மனைவி வள்ளி(வயது 36) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் பழனிவேலு, விழுப்புரம் மாவட்டம் தேன்குளத்தை சேர்ந்த சதீஷ், விக்னேஷ், ரமேஷ், செல்வராஜ், வீரமணி மற்றும் டிரைவர் ஏழுமலை ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும், விபத்தில் பலியான வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story