ஆளில்லா குட்டி விமானம் மூலம் மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு


ஆளில்லா குட்டி விமானம் மூலம் மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 22 April 2019 11:00 PM GMT (Updated: 22 April 2019 7:27 PM GMT)

கும்பகோணம் அருகே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தொல்லியல் துறை யினர் நேற்று ஆய்வை தொடங்கினர். இன்றும்(செவ்வாய்க் கிழமை) இந்த ஆய்வு தொடர்ந்து நடக்கிறது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாகவும், இதை ஐகோர்்ட்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் சென்னை மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 11-ந் தேதி விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், உடையாளூரில் இருப்பதாக கூறப்படும் ராஜராஜ சோழன் சமாதி குறித்து ஆய்வு செய்து அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நேற்று தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் தங்கதுரை, பாஸ்கர், கல்வெட்டு ஆய்வாளர்கள் லோகநாதன், சக்திவேல், பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாக கூறப்படும் உடையாளூர்் பகுதியை சுற்றி 10 ஏக்கர் நிலத்தில் ஆய்வு பணியை தொடங்கினர்.

அப்போது ஆளில்லா குட்டி விமானத்தில் நவீன கேமராக்கள் பொருத்தி பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக்கடியில் நீரோட்டம், பழமையான கட்டிடங்களின் தன்மை, தற்போதைய கட்டிடங்கள் ஆகியவற்றை படம் பிடித்தும், அதன் கோணங்களையும் கணினி மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் நிருபர்்களிடம் கூறியதாவது:-

மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் பேரில் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூாில், ராஜராஜன் இறந்ததாக கூறப்படும் சமாதியை ஆய்வு செய்து வருகிறோம். இன்று(அதாவது நேற்று) ஆளில்லா விமானத்தில் நவீன கேமிராக்கள் பொருத்தி பூமியின் மேற்பரப்பு அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வு தெர்்மோ போட்டோகிராபி தொழில் நுட்ப முறையில் மேற்கொள்ளப்பட்டது.

நாளை(அதாவது இன்று ) ஜி.பி.ஆர்்.எஸ். கருவி மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். பூமியின் கீழ் உள்ள மாற்றங்கள், உலோகங்கள் ஆகியவை பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து ஆய்வு அறிக்கை தயார் செய்து தொல்லியல் துறையின் ஒப்புதலுடன் ஐகோர்ட்டில் சமர்்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்். 

Next Story