வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு


வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு
x
தினத்தந்தி 23 April 2019 3:30 AM IST (Updated: 23 April 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

இவைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய கிணறுகளில் தவறி விழுந்து இறந்து வருகின்றன. மேலும் மான்களை நாய்கள் விரட்டி கடித்து குதறியும், சாலைகளை கடக்கும் போது விபத்தில் சிக்கியும் இறந்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்தது. இதை கண்ட தெருநாய்கள் அந்த மானை விரட்டி சென்றன. இதனால் அந்த மான் நாய்களிடம் இருந்து தப்பிக்க தெருவில் ஓடியது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு மானை பத்திரமாக மீட்டு கயிறு மூலம் கட்டி வைத்தனர்.

நாய்கள் கடித்ததில் மானுக்கு லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மொரப்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர்கள் மூலம் மானுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மானை வனத்துறையினர் மல்லிகார்ஜூனர் காப்புக் காட்டில் கொண்டு விட்டனர்.

Next Story