பெண்களை கிண்டல் செய்தவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


பெண்களை கிண்டல் செய்தவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 23 April 2019 4:30 AM IST (Updated: 23 April 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

இளம் பெண்களை கிண்டல் செய்தவர்களை கைது செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கீழக்கணவாய் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்ததில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் வழக்கம்போல் திங்கட்கிழமை (அதாவது நேற்று) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று நேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தான் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இருப்பினும் மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் வசிக்கும் ஒரு பிரிவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென்று திரண்டு வந்து, கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் எங்கள் பிரிவு மக்களும், மற்றொரு பிரிவை சேர்ந்த மக்களும் பலகாலமாக சகோதரத்துடன் வசித்து வந்தோம். தற்போது அந்த பிரிவை சேர்ந்த 7 பேர் எங்கள் பகுதிக்கு வந்து இளம் பெண்களை கிண்டல் செய்தனர். இதனை தட்டி கேட்ட எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரை, அந்த 7 பேர், மேலும் சிலரை அழைத்து வந்து, வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிவிட்டு சென்றனர். இதையடுத்து மீண்டும் அந்த பிரிவை சேர்ந்த 2 பேர் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தான் நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே இளம் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகராறில் ஈடுபட்டு வரும் அந்த பிரிவை சேர்ந்தவர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க 5 நபரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அந்த மனுவினை பெற்று கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், அலுத்தூர் தாலுகா நாரணமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுக்க வந்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தக் கூடிய கிணற்று தண்ணீரை ஒருசிலர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிணற்றின் அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. இதுகுறித்து எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கேட்டதற்கு, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கிணற்று தண்ணீரை குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் மட்மே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதையடுத்து அந்த மனுவினை புகார் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

வேப்பந்தட்டை தாலுகா பிம்பலூர் கிராம மக்கள் பிம்பலூர் ஊராட்சி செயலாளரை மாற்றம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் பழுதடைந்த குடிநீர் தொட்டிகள் சீரமைக்கப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் சரிவர வழங்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை கூறியும், அவர் நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். ஊராட்சி செயலாளர் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவைகளில் ஊழல் செய்துள்ளார் என தெரிகிறது. எனவே பிம்பலூர் ஊராட்சி செயலாளரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து பிம்பலூர் பொதுமக்கள் இது குறித்த மனுவினை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். 

Next Story