சேலம், ஆத்தூர், கெங்கவல்லியில் சூறாவளி காற்றுடன் கனமழை ஓமலூரில் 200 கோழிகள் செத்தன
சேலம், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஓமலூர் பகுதியில் தடுப்பணை உடைந்ததால் கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்ததால் 200 கோழிகள் செத்தன.
சேலம்,
தமிழகம் முழுவதும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சேலம், ஓமலூர், ஏற்காடு, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சேலம் மாநகரில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
அஸ்தம்பட்டி, சூரமங்கலம், பெரமனூர், அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது. சேலத்தில் இரவு நள்ளிரவு வரை பெய்த மழையால், வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதோடு, இதமான சீதோஷ்ணநிலை காணப்பட்டது.
ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலையிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது.
இதை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இளைஞர்கள் சிலர், மழையில் நனைந்து மகிழ்ந்தனர். மேலும் ஆலங்கட்டியை கையில் எடுத்து பார்த்தனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட ஒதியத்தூர், நடுவலூர், 74 கிருஷ்ணாபுரம், ஆணையம்பட்டி, தெடாவூர், கூடமலை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது சுமார் 1½ மணி நேரம் நீடித்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததை காணமுடிந்தது. மேட்டூரில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து தீவட்டிப்பட்டி, தும்பிபாடி, சர்க்கரை செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் நாகலூர் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும், மேஸ்திரிவலவு பகுதியில் கார்த்தி, சிவா ஆகியோர் நடத்தி வரும் நாட்டுக்கோழி பண்ணைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதுபற்றி அறிந்த அதன் உரிமையாளர்கள் அங்கு வந்து கோழிகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மழைநீரில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் செத்தன. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story