கயத்தாறு அருகே மது குடித்ததை கண்டித்ததால் தகராறு: கருப்புக்கட்டி வியாபாரி வெட்டிக்கொலை இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
கயத்தாறு அருகே மது குடித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கருப்புக்கட்டி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளத்தை சேர்ந்தவர் பாண்டியராஜா (வயது 66). இவர் அங்குள்ள காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பூல்பாண்டி (வயது 25). அதே ஊரைச் சேர்ந்தவர்கள் கோட்டைசாமி மகன் மணிகண்டன் (23), முருகன் மகன் கிருஷ்ணமூர்த்தி (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் மினி வேனில் வெளியூர்களுக்கு சென்று, கருப்புக்கட்டி வியாபாரம் செய்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊரின் அருகில் தெற்கு இலந்தைகுளம்-வடக்கு ஆத்திகுளம் செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பாலத்துக்கு சென்றனர். அந்த பாலத்தின் தடுப்பு சுவரில் 3 பேரும் அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது அந்த வழியாக வடக்கு ஆத்திகுளத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி ஒன்றிய தலைவரான ராமசாமி (48) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த பூல்பாண்டி, மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் பொதுமக்கள் செல்லும் சாலையோரம் அமர்ந்து மது குடிக்க கூடாது என்று கூறி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ராமசாமியின் தலையில் வெட்டினார். இதில் ராமசாமியின் தலையில் ரத்தம் பீறிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி, மணிகண்டனிடம் இருந்த அரிவாளை பிடுங்கி, பதிலுக்கு அவரை வெட்ட முயன்றார். அப்போது ராமசாமியை பூல்பாண்டி தடுக்க முயன்றார்.
எனினும் ராமசாமி அரிவாளால் பூல்பாண்டியின் மார்பில் ஓங்கி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பூல்பாண்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று, கயத்தாறு சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெபராஜ் (கோவில்பட்டி), பால்துரை (தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு), போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர் கலாசெல்வி பதிவு செய்தார். போலீஸ் மோப்ப நாய் ‘ஜூசு‘ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதற்கிடையே, அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராமசாமியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் ராமசாமி, மணிகண்டன் ஆகியோரது மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது குடித்தத்தை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் கருப்புக்கட்டி வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story