போலீஸ்காரர் மனைவி தற்கொலை: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


போலீஸ்காரர் மனைவி தற்கொலை: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 April 2019 10:30 PM GMT (Updated: 22 April 2019 8:27 PM GMT)

நெல்லையில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 30). இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கேரளாவுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். இவருடைய மனைவி ஜெயசூர்யா (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகிறது.

முத்துக்குமார் கேரளாவுக்கு சென்று விட்டதால், ஜெயசூர்யா கணவர் வீட்டில் மாமியார், மாமனார் உடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை அவரது அறைக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது ஜெயசூர்யாக தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயசூர்யாவின் தந்தை, பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் மற்றும் அவருடைய உறவினர்கள் ஜெயசூர்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயசூர்யாவுக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.

சமையல் தொடர்பாக மாமியார், மருமகள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயசூர்யாவின் மாமியாரிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெயசூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், ஜெயசூர்யா சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது போலீஸ் அதிகாரிகள், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகும், உதவி கலெக்டரின் உத்தரவுப்படியும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதற்கிடையே கேரளாவுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ள ஜெயசூர்யாவின் கணவர் முத்துகுமார், மனைவி இறந்த தகவல் கிடைத்தும், அவர் ஊருக்கு உடனடியாக திரும்பி வரவில்லை. மேலும் ஜெயசூர்யாவின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்‘ ஆகி, காணாமல் போய் உள்ளது. எனவே ஜெயசூர்யா சாவுக்கான காரணம் குறித்த தடயங்களை அழிக்க முயற்சி நடப்பதாக அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதுதொடர்பாகவும் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story