சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலி


சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 22 April 2019 8:27 PM GMT)

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமர்காளை (வயது 25), சமுத்திரபாண்டி (25), அரவிந்த் ராஜ் (25). இவர்களில் ராமர்காளை கூலி தொழிலாளி. சமுத்திரபாண்டி (25) கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் தங்கி படித்து வந்தார். அரவிந்த்ராஜ் (25) வன்னிக்கோனேந்தலில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க சென்றனர்.

மோட்டார் சைக்கிளை அரவிந்த் ராஜ் ஓட்டினார். சங்கரன்கோவில் அருகே குதிரை கோவிலை கடந்து சென்றபோது அந்த பகுதியில் சங்கரன்கோவிலை சேர்ந்த கோழி வியாபாரி அப்துல் காதர் (25) மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் ராமர் காளை உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ராமர்காளை, சமுத்திரபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அரவிந்த்ராஜ், அப்துல் காதர் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரவிந்த்ராஜ், அப்துல் காதர் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அப்துல் காதரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராமர்காளை, சமுத்திரபாண்டி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story