இளம்பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்: 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


இளம்பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்: 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 April 2019 3:45 AM IST (Updated: 23 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய 4 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

சேலம், 

சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் கடந்த மாதம் 22-ந் தேதி 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மற்றும் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்ற கொண்டலாம்பட்டி கருப்பனார் கோவில் காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வானக்காரன் கோவில் காட்டை சேர்ந்த தினேஷ்குமார் (26), செட்டிகாட்டை சேர்ந்த சுபாஷ் (27), பெரிய புத்தூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் இளம்பெண்ணையும், அவருடன் வந்தவரையும் தாக்கி தங்க நகையை பறித்துக்கொண்டனர். மேலும் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து மிரட்டி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த இளம்பெண் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மணிகண்டன், தினேஷ்குமார், சுபாஷ், இளங்கோவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 4 பேர் மீதும் திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்கான வழக்குகள் உள்ளன. இவர்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று மணிகண்டன், தினேஷ்குமார், சுபாஷ், இளங்கோவன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர். மணிகண்டன் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story