கோவையில் மர்ம காய்ச்சலுக்கு புதுப்பெண் சாவு - திருமணமான 21-வது நாளில் சோகம்
கோவையில் மர்ம காய்ச்சலுக்கு புதுப்பெண் பலியானார். அவர் திருமணமான 21-வது நாளில் பரிதாபமாக இறந்து உள்ளார்.
கோவை,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது ஆயக்குடியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 27). இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறது. இவருக்கும் கோவை பச்சாபாளையம் சக்தி நகரை சேர்ந்த ரகமத்பீவி என்கிற பர்சானா (27) என்ற இளம் பெண்ணுக் கும் கடந்த மாதம் 31-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
பின்னர் அப்துல் ரகுமானும், பர்சானாவும் விருந்துக்காக புது ஆயக்குடிக்கு சென்றுவிட்டு கடந்த வாரம் கோவை வந்தனர். இதையடுத்து வேலை தொடர்பாக அப்துல் ரகுமான் ஐதராபாத் சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பர்சானாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. மேலும் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பர்சானா பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பர்சானா மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பர்சானாவுக்கு திருமணமாகி 21 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது. புதுப்பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பச்சாபாளையம் சக்திநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story