கூடலூர் அரசு கல்லூரியில், இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம்


கூடலூர் அரசு கல்லூரியில், இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 23 April 2019 4:00 AM IST (Updated: 23 April 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அரசு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.

கூடலூர்,

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இது பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி என்பதால் வேலைவாய்ப்புகள் மிக குறைவு. மேலும் இங்குள்ள மாணவ- மாணவிகள் பள்ளிக்கல்வியை முடித்தால் உயர்கல்வி கற்க கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடந்த 2003-ம் ஆண்டு தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா உத்தரவின் பேரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டது. தொடக்க காலத்தில் 260 மாணவ- மாணவிகள் சேர்ந்து படித்தனர். தற்போது 3 ஆயிரத்து 300 மாணவ- மாணவிகள் ஆண்டுதோறும் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் கல்லூரி செயல்படுவதால் கல்வி கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு உத்தரவின் பேரில் அது அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. மேலும் கடந்த மார்ச் மாதம் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதையொட்டி அரசு கல்லூரியாக மாற்றி உள்ளதால், கல்வி கட்டணம் மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் வருகிற 2019-20-ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூடலூர் அரசு கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கே.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வருகிற கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயில்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பி.ஏ.(ஆங்கிலம்), பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.காம், பி.எஸ்சி(பல்வேறு பிரிவுகள்) உள்பட 14 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லூரி வேலை நேரத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதி சான்றிதழுடன் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story