சென்னை விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 April 2019 4:15 AM IST (Updated: 23 April 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். கொழும்புக்கு கடத்த முயன்ற ரூ.26 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிரமாக கண்கணித்தனர்.

அப்போது சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, அந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விமானத்தின் இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கேட்பாரற்று கிடப்பதை கண்டு பிடித்தனர்.

ரூ.15 லட்சம் தங்கம்

அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் 4 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.15 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 465 கிராம் எடைகொண்ட அந்த தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர், அந்த விமானம் உள்நாட்டு விமானமாக செல்வதை அறிந்து கொண்டு, சுங்க இலாகா அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க உள்நாட்டு பயணிபோல் வந்து எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டு தங்கத்தை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து விட்டு சென்று இருக்கலாம் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த தங்கத்தை சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது யார்?, அதை உள்நாட்டு பயணியாக எடுக்க இருந்தது யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பணம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்த உள்ளதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், சென்னையில் இருந்து கொழும்பு செல்ல வந்த திருச்சியை சேர்ந்த முகமது நாசர்(வயது 43) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர், துணிகளுக்கு இடையே சவுதி ரியால்களை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்களை பறிமுதல் செய்தனர்.

ஹவாலா பணமா?

அதேபோல் சென்னையில் இருந்து கொழும்பு வழியாக மலேசியாவுக்கு செல்ல வந்த மதுரையை சேர்ந்த அஜீஸ்கான்(30) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்து இருந்த ரூ.10 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள யூரோ கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.

இருவரிடம் இருந்தும் ரூ.26 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் மற்றும் யூரோ கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவை ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story