வீராணம் அருகே இளம்பெண் மர்ம சாவு உதவி கலெக்டர் விசாரணை


வீராணம் அருகே இளம்பெண் மர்ம சாவு உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 23 April 2019 3:30 AM IST (Updated: 23 April 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம், 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தும்பல் மாமாஞ்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). லாரி டிரைவர். இவருக்கும், அவருடைய உறவினர் பெண்ணான வீராணம் அருகே வலசையூர் ஏரிக்காடு பகுதியை சேர்ந்த இந்துமதி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்துமதிக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு இந்துமதி ஏரிக்காட்டில் உள்ள தனது தாயார் சாந்தி வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்துமதி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை ஆட்டோவில் ஏற்றி அம்மாபேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சாந்தி கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்துமதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப் பட்டது.

இந்துமதி சாவு குறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்துமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சாந்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார், இந்துமதி சாவு தொடர்பாக மர்ம சாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்துமதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் செழியனும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story