காட்பாடியில் தனியார் பஸ்-வேன் நேருக்கு நேர் மோதலில் 3 பேர் பலி 18 பேர் படுகாயம்
காட்பாடியில் தனியார் பஸ், வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
காட்பாடி,
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள காட்பாடி கிளித்தான்பட்டறை வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் முரளிதரன். இவருடைய உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சி ஆற்காட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வெங்கடேசபுரத்தை சேர்ந்த உறவினர்கள் ஆற்காடு செல்வதற்கு வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வேனில் 21 பேர் ஆற்காட்டிற்கு சென்றனர். வேனை கே.வி.குப்பத்தை சேர்ந்த டிரைவர் அசோக்குமார் (வயது 34) ஓட்டிச்சென்றார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வெங்கடேசபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேன் காட்பாடி கிளித்தான்பட்டறையில் உள்ள குறுகலான சிறிய பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த தனியார் பஸ்சும், இந்த வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் பஸ் மற்றும் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதோடு பஸ்சின் முன்பகுதி உடைந்து அதற்குள் வேனின் முன்பகுதி சிக்கிக்கொண்டது. இதனால் வேனில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என கூக்குரலிட்டனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அசோக்குமார், வெங்கடேசபுரத்தை சேர்ந்த சதீஷ்பாபுவின் மனைவி புவனேஸ்வரி (24), நீலகண்டராயன்பேட்டையை சேர்ந்த குமார் (55) ஆகியோர் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கிளித்தான்பட்டறை வெங்கடேசபுரத்தை சேர்ந்த செல்வபாபு (55), சண்முகம் (23), ஜெயலட்சுமி (23), நித்தியராஜ் (18), ஆகாஷ் (14), ஜெகதீஸ்வரி (44), ராமமூர்த்தி (48), சாந்தி (35), முரளிதரன் (50), மோகனா (44), செங்கமலம் (80), ஸ்ரீதர் (13), சதீஷ் (29), வள்ளியம்மாள் (50), தனலட்சுமி (47), சேட்டு (59), மகாலட்சுமி (47), ராஜா (23) ஆகியோர் படுகாயத்துடன் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதனிடையே இந்த விபத்தினால் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த வாகனங்களும், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றது. போலீசார் கிரேனை வரவழைத்து, விபத்தில் சிக்கிய இரு வாகனத்தையும் பிரித்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
தகவல் அறிந்த கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு போலீசாரிடம் கேட்டறிந்தனர். காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாசில்தார் சங்கர் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இதையடுத்து கலெக்டர் ராமன் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story