கண்ணமங்கலம் அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை


கண்ணமங்கலம் அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 23 April 2019 4:45 AM IST (Updated: 23 April 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் விழுந்து இறந்த வாலிபர் ஜலசமாதி அடைந்ததாக கூறியதை தொடர்ந்து புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ராமநாதபுரம் கிராமம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், ஆசிரியர். இவரது மகன் தனநாராயணன் (வயது 17). கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தனநாராயணன் அவரது வீட்டு எதிரில் உள்ள வயல் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவரை பிணமாக மீட்டனர். ஆனால் தனநாராயணனின் தந்தை அரிகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சந்தவாசல் போலீசார், தனநாராயணனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாக ‘வாட்ஸ் அப்’ மற்றும் முகநூலில் தனநாராயணன் ஜல சமாதி ஆனதாகவும் அவருக்கு அரிகிருஷ்ணன், வேலூரை சேர்ந்த யோகா பயிற்சியாளர் பழனி உதவியுடன் சித்தர் சமாதி அமைத்து வழிபாடு செய்ய தனது நிலத்திலேயே அடக்கம் செய்துள்ளனர் என்றும் அந்த நிலத்தின் அருகே சாலையோரம் தனநாராயணன் ஜீவ சமாதி என பிளக்ஸ் பேனரும் வைத்துள்ளனர் என்றும் தகவல் பரவியது.

இதுகுறித்து படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் கடந்த 21-ந் தேதி சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதில் இறந்த வாலிபர் “தனநாராயணன் ஜலசமாதி ஆனார் என்ற தகவல் காரணமாக சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த புகார் சம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி பரிந்துரையின் பேரில் ஜலசமாதி செய்யப்பட்டதாக கூறப்படும் தனநாராயணன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர்கள் சாலமோன் ராஜா, விநாயகமூர்த்தி, மைதிலி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

மதியம் சுமார் 1.30 மணியளவில் தனநாராயணன் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி ஆகியோர் வந்தனர். அங்கு சிமெண்டு தொட்டியை வைத்து அதற்குள் அமர்ந்த நிலையில் தனநாராயணனின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தனநாராயணனின் தந்தை அரிகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது போளூர் தாசில்தார் ஜெயவேலு உடனிருந்தார்.

இதனை தொடர்ந்து தனநாராயணனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட மருத்துவமனை தடய அறிவியல் டாக்டர் கமலக்கண்ணன் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினர்.

தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, அரிகிருஷ்ணன் குடும்பத்தாரிடம் “உங்கள் மத நம்பிக்கைகளில் தலையிட மாட்டோம். சட்ட நடவடிக்கைக்காக பிரேத பரிசோதனை நடத்துகிறோம்” என்றார். பிரேத பரிசோதனை நடப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய தகவல்கள் சேகரிக்காமலும், அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காததாலும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தூசி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

Next Story