ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு


ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2019 4:15 AM IST (Updated: 23 April 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வேலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்குகள் வேலூர் தந்தைபெரியார் பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டு 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான வேலூர் பகுதியில் உள்ள தந்தைபெரியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குப் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் சரியாக இயங்குகிறதா?, அங்கு நடக்கும் காட்சிகள் பதிவாகிறதா? என்பதைப் பார்வையிட்டார்.

பின்னர் பாதுகாப்புக் குறித்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்களிடம் கேட்டறிந்து, அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டு கையெழுத்திட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வேலூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கூடுதலாக 20 அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Next Story