மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போனவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு பீகாரை சேர்ந்தவர்


மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போனவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு பீகாரை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 23 April 2019 3:45 AM IST (Updated: 23 April 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன பீகாரை சேர்ந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு நினைவு திரும்பி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உதவும் உள்ளங்கள் சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியில் சுற்றித் திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டு, மனநல சான்று பெற்று காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காப்பகத்தில் மருத்துவ உதவி, பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் மூலமாக அவருக்கு திடீரென நினைவு திரும்பியது. தனது பெயர் ராஜ்குமார் சிங், பீகார் மாநிலம், சீதாமார்ஹி மாவட்டம், பரிஹார் வட்டம், மெய்சாஹ் கிராமத்தை சேர்ந்தவன் என தெரிவித்தார். மேலும் தாய் தந்தை பெயர் ராம்தேவ்சிங் - ஸ்ருதியாதேவி என்றும், விமலாதேவி என்ற மனைவியும், ரவிக்குமார், ரிஷிகுமார் ஆகிய 2 மகன்கள் இருப்பதையும் தெரிவித்தார். மேலும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நலிவடைந்ததால், மனக்குழப்பம் ஏற்பட்டு வீடு திரும்பவில்லை என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து காப்பகத்தில் இருந்து பரிஹார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள போலீசாரின் உதவியுடன் உறவினர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். பின்னர் போலீசாரின் அறிவுரையின்பேரில் அவர்கள் திருப்பத்தூர் காப்பகத்திற்கு வந்தனர். அங்கு ராஜ்குமாரை கண்டதும், அவரது மனைவி விமலாதேவி, மகன் ரவிக்குமார், சகோதரர் வீரேந்தர், மைத்துனர் அசோக் ஆகியோர் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

பின்னர் ராஜ்குமாரின் மனைவி விமலாதேவி கூறுகையில், என் கணவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் ஆகிறது, அவர் காணாமல் போனதில் இருந்து நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை, இத்தனை நாள் அவர் எங்கிருந்தாரோ, எப்படி வாழ்ந்தாரோ தெரியவில்லை, திடீரென ஒருநாள் போன் மூலமாக என் கணவர் என்னிடம் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது, என் கணவரை மீட்டு என்னிடம் தந்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன், என் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட இந்த திருப்பம் என்றும் மறக்க முடியாது என்றார்.

அதன்பிறகு திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா முன்னிலையில், ராஜ்குமார் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story