பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை, கணவரிடம் தொடர்ந்து விசாரணை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திண்டிவனத்தில் பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, அவரது கணவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
விழுப்புரம்,
திண்டிவனம் சேடன்குட்டை தெருவில் வசித்து வந்தவர் மாணிக்கவேல் மனைவி ஜெய்ஹிந்த்தேவி (வயது 39). இவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவர் படுத்திருந்த அறையின் கதவு நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது கணவர் மாணிக்கவேல், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது புடவையால் தூக்குப்போட்ட நிலையில் ஜெய்ஹிந்த்தேவி பிணமாக தொங்கினார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில், கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறினால் ஜெய்ஹிந்த்தேவி மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் ஜெய்ஹிந்த்தேவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அக்காள் ரேணுகாதேவி, போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நேற்று நிருபர்களிடம் கூறுகையில், இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த்தேவி திறமையாகவும், துணிச்சலாகவும் பணியாற்றக்கூடியவர். அவருக்கு வேலைப்பளு எதுவும் கிடையாது. தேர்தல் முடிந்ததும் அவர் 2 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு நெய்வேலியில் இருந்து புறப்பட்டு திண்டிவனம் வந்துள்ளார். அவரது குழந்தைகள் இருவரும், விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த சூழலில் சம்பவத்தன்று மாணிக்கவேல் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மனவேதனையடைந்து இன்ஸ்பெக்டர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கை இதனை உறுதி செய்துள்ளது. இருந்தபோதிலும் அவரது கணவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அது விசாரணையின் முடிவில்தான் தெரியும் என்றார்.
Related Tags :
Next Story