சின்னசேலம் அருகே, தனியார் விதை பண்ணையில் ஊழியர் மயங்கி விழுந்து பலி - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் மகன் புகார்
சின்னசேலம் அருகே தனியார் விதை பண்ணையில் மயங்கி விழுந்த ஊழியர் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் மகன் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 57). இவர் மூங்கில்பாடியில் உள்ள தனியார் விதை பண்ணையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் துரைசாமி வேலைக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று மதியம் தனியார் விதை பண்ணையில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் துரைசாமி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறி, அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுபற்றி அறிந்து வந்த துரைசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த சின்னசேலம் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து துரைசாமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது தலையிலும், காலிலும் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து துரைசாமியின் மகன் சந்திரசேகர்(32) சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது தந்தையின் தலை மற்றும் கால்களில் காயங்கள் உள்ளதால், அவரது சாவில் தனக்கு சந்தேகம் உள்ளது. அதனால் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story