கடலூர் சில்வர் பீச்சில், செஞ்சியை சேர்ந்த பெண் கடலில் இறங்கி தற்கொலை முயற்சி-குழந்தை சாவு


கடலூர் சில்வர் பீச்சில், செஞ்சியை சேர்ந்த பெண் கடலில் இறங்கி தற்கொலை முயற்சி-குழந்தை சாவு
x
தினத்தந்தி 23 April 2019 4:00 AM IST (Updated: 23 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் சில்வர் பீச்சில் செஞ்சியை சேர்ந்த பெண் தனது 8 மாத பெண் குழந்தையுடன் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது குழந்தை பரிதாபமாக செத்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் உள்ளது. இங்கு நேற்று மதியம் 1.30 மணி அளவில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே இருந்தனர். அப்போது ஒரு பெண், கைக்குழந்தையுடன் கடற்கரை மணலில் நடந்து சென்றார். திடீரென அவர் கடலுக்குள் இறங்கி ஆழமான பகுதியை நோக்கி சென்றார். அவர் கடலில் மூழ்கி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை பார்த்த இளைஞர்களும், புறக்காவல் நிலைய போலீசாரும் விரைந்து சென்று, அந்த பெண்ணை குழந்தையுடன் மீட்டனர்.

பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் பற்றி தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அந்த பெண் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் பனமலையை சேர்ந்த ஜெயமுருகன் என்பவரது மனைவி திவ்யா (வயது 24) என்பது தெரியவந்தது., பி.எஸ்சி. படித்துள்ள திவ்யாவும், எம்.பி.ஏ. படித்து விட்டு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெயமுருகனும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்தை திவ்யாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இந்த நிலையில் திவ்யாவுக்கு 8 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையையும் அவளுடைய பெற்றோர் பார்க்க வரவில்லை. இதனால் திவ்யா தனது 8 மாத குழந்தை மெரிசிலினாவுடன் தற்கொலை செய்வதற்காக கடலூர் சில்வர்பீச்சுக்கு வந்துள்ளார். அங்கு அவர் தன் குழந்தை மெர்சிலினாவுடன் கடலில் இறங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது அவரது மடியில் இருந்த குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது கணவர் ஜெயமுருகனுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சையில் உள்ள மனைவியையும், இறந்து கிடந்த குழந்தையையும் பார்த்து கதறி அழுதார். அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story