இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடகத்தை சேர்ந்த மேலும் 6 பேர் பலி சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்


இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடகத்தை சேர்ந்த மேலும் 6 பேர் பலி சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 23 April 2019 4:30 AM IST (Updated: 23 April 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கர்நாடகத்தை சேர்ந்த மேலும் 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு,

இலங்கையில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ தேவாலயங்கள், சொகுசு விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இதில் 290 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 450-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் இறந்தவர்களில் இந்தியர்களும் உள்ளனர். இதில் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணும் பலியாகி இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது.

இந்த நிலையில் மேலும் 6 பேர் பலியானது தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கர்நாடகத்தை சேர்ந்த ரமேஷ், கே.எம்.லட்சுமி நாராயண், எம்.ரங்கப்பா, கே.ஜி.ஹனுமந்தராயப்பா ஆகிய 4 பேர் மரணம் அடைந்து இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இறந்தவர்கள் அனைவரும் துமகூரு மற்றும் நெலமங்களா பகுதியை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் இருந்து 7 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றனர். அதில் 4 பேர், அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை. எச்.சிவக்குமார், ஏ.மாரேகவுடா, எச்.புட்டராஜு ஆகிய 3 பேர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

கர்நாடக அரசின் தலைமை செயலாளர், டெல்லியில் உள்ள கர்நாடக பவன் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். மாயமானவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். இந்த கொடூரமான தாக்குதலில் கர்நாடகத்தினர் மரணம் அடைந்ததை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இது அதிகமான துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவிக்கிறேன். இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி இந்த பதிவை வெளியிட்ட பிறகு கர்நாடகத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரும் உயிரிழந்த தகவல் மாலையில் வெளியானது. இந்த தகவலை மாநில அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார். இதனால் 7 பேரில் 5 பேர் உயிரிழந்தது உறுதியானது. பலியானவர்களில் நாகராஜ் என்பவர் காங்கிரசை சேர்ந்தவர் என்றும், முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

முதல்கட்ட தேர்தலையொட்டி இலங்கை சென்ற 7 பேரும் தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்றினர். தேர்தல் முடிவடைந்த பிறகு அவர்கள் 7 பேரும் கடந்த 20-ந் தேதி இலங்கைக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்த உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், வீரப்பமொய்லி எம்.பி., குண்டுவெடிப்பில் பலியான ஹனுமந்தராயப்பாவின் பெங்களூருவில் உள்ள வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இறந்தவர்களின் உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு கர்நாடகத்திற்கு கொண்டுவரப்படும். ஒரு எம்.எல்.ஏ. இலங்கைக்கு சென்றுள்ளார். இன்ெனாரு எம்.எல்.ஏ. அங்கு செல்லவுள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுவுடன் பேசினேன்” என்றார்.

இதற்கிடையே ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எச்.சிவக்குமாரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தகவல் நேற்று இரவு வெளியானது. இதனால் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பலியான அனைவரும் இலங்கைக்கு சுற்றுலா சென்ற போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story