கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி, தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்
வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தேனி,
தேனியை சேர்ந்தவர் வக்கீல் புகழேந்தி. இவர் கடந்த 3-ந்தேதி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு ஒரு வழக்கு சம்பந்தமாக சென்று இருந்தார். அப்போது அங்கு, வழக்கு விசாரணைக்கு வந்த 2 பேர், புகழேந்தியிடம் தகராறு செய்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து, மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தேனியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர். காலையில் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை வரை நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தின் போது, வக்கீல் புகழேந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story