தண்டையார்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டி துணிக்கடையில் திருட்டு; 5 பேர் கைது


தண்டையார்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டி துணிக்கடையில் திருட்டு; 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 April 2019 3:15 AM IST (Updated: 24 April 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டையில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் புதிய துணிகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 21). தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் துணிக்கடையில் தனது தம்பி விக்னேஷ் என்பவரை வைத்துவிட்டு மதிய உணவு சாப்பிட சென்றார். அப்போது கடைக்கு 5 பேர் வந்தனர். அவர்கள் துணிகள் எடுப்பது போல பார்த்துவிட்டு திடீரென கத்தியை காட்டி விக்னேசை மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள துணிகளையும், ரூ.10 ஆயிரத்தையும் திருடி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மோகன்குமார் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

5 பேர் கைது

அதில் கொள்ளையர்கள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் புதுவண்ணாரப்பேட்டை பல்லவா நகரை சேர்ந்த சுரேஷ் (27), விமல் (23), சரண் (30), பிரகாஷ் என்ற தேசப்பன் (26) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் தான் கத்தி முனையில் பணம், துணியை திருடி சென்றது தெரியவந்தது.

அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 17 வயது சிறுவனை சென்னை சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 4 பேரையும் புழல் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

Next Story