இளம் வயதில் உறுப்பு தானம் செய்த மும்பை குழந்தை: விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை
விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை ஆஸ்பத்திரி சாதனை படைத்துள்ளது. இந்த குழந்தைக்கு உறுப்பு தானம் செய்ததன் மூலம் மும்பையை சேர்ந்த குழந்தை ஒன்று இந்தியாவிலேயே இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்த குழந்தை என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சென்னை,
விழுப்புரத்தை சேர்ந்த ரோஹன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 2 வயது ஆண் குழந்தைக்கு தீவிரமான இடது இதய சிற்றறை செயலிழப்புடன் விரிந்த இதய தசை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சுவாசிக்க முடியாமல் கடும் பிரச்சினைகளோடு திரும்பத் திரும்ப ஆஸ்பத்திரியில் ரோஹனை சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டியது இருந்தது. உரிய மருந்துகள் வழங்கியபோதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத ரோஹனுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.
இந்த நிலையில், மும்பையை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை ஒன்றின் மூளையானது சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியாத நிலையில் இருந்தது. அந்த குழந்தையின் குடும்பத்தினர் அதன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதன் மூலம் 6 பேரின் வாழ்வுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்த குழந்தை என்ற சிறப்பை மும்பையை சேர்ந்த அந்த குழந்தை பெற்றது.
இதய மாற்று அறுவை சிகிச்சை
விழுப்புரத்தை சேர்ந்த குழந்தை ரோஹனுக்காக மும்பை குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட இதயமானது விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் இதய அறிவியல் துறை இயக்குனர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை பிரிவு மற்றும் இதயம் சார்ந்த உணர்விழப்பு மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் கே.ஜி. சுரேஷ் ராவ் ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் குழு குழந்தை ரோஹனின் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது.
இந்த இதயமாற்று அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் கூறும்போது, “இதயத்தை தானமாக பெறுபவர் 2 வயதே ஆன குழந்தை என்பதால் இந்த அறுவை சிகிச்சையானது சிரமமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. குழந்தைகளுக்கான இதய மாற்று அறுவை சிகிச்சையில் இது ஒரு மைல்கல் ஆகும்” என்றார்.
Related Tags :
Next Story