சிங்கம்புணரி அருகே குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதன பொருட்கள் சேதம்; தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை


சிங்கம்புணரி அருகே குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதன பொருட்கள் சேதம்; தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 April 2019 3:30 AM IST (Updated: 24 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே குறைந்த மின் அழுத்தம் காரணமாக அப்பகுதியில் வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் சேதமடைந்து வருகிறது. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.புதூர்,

சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியம், செட்டிக்குறிச்சி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து காட்டுப்பகுதிக்குள் உள்ள தோட்டங்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்தப்பகுதிகளில் செல்லும் மின் வயரில் அப்பகுதியில் உள்ள மரம், தென்னை மட்டைகள் ஆகியவை விழுந்து அடிக்கடி இந்த பகுதியில் மின்தடை ஏற்படுகிறது.

மேலும் இந்தப் பகுதியில் மிக குறைவான டிரான்ஸ்பார்மர்களே உள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின்சாரம் செல்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.

மேலும் தற்போது கோடை காலமாக உள்ள நிலையில், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் விசிறி இயங்காமல் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை திறந்து வைத்து விட்டு வீட்டிற்கு வெளியே தூங்க வேண்டிய நிலை உள்ளது. இது தவிர, இந்த குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின் விசை மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இந்தப் பகுதியில் உள்ள குறைந்த மின்னழுத்த பிரச்சினையை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். மேலும் இந்த பகுதியில் கூடுதலாக டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story