ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை


ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 April 2019 10:45 PM GMT (Updated: 23 April 2019 7:30 PM GMT)

ஆண்டிப்பட்டியில் நண்பர்களுடன் சினிமா பார்க்க சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சீத்தாராம்தாஸ்நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திரபிரசாத் (வயது18). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். கோவில் திருவிழாவிற்காக நாகேந்திரபிரசாத் ஆண்டிப்பட்டிக்கு வந்து இருந்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த 21-ந்தேதி நண்பர்களுடன் தேனிக்கு சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அன்று போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

எனவே அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து நாகேந்திரபிரசாத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு பின்புறம் ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் நாகேந்திரபிரசாத் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பாலகுரு ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகேந்திரபிரசாத் உடலில் தலை, கழுத்து, மார்பு, முகம் போன்றவற்றில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

எனவே நாகேந்திரபிரசாத் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாகேந்திரபிரசாத்தின் நண்பர்கள் யார்? அவர் எப்படி கொலை செய்யப்பட்டார். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story