தென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 April 2019 9:30 PM GMT (Updated: 23 April 2019 7:31 PM GMT)

தென்காசி, செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதிய நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் அடித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தென்காசி, சிவகிரி, செங்கோட்டை, ஆய்குடி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் அணை பகுதிகளான கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், ராமநதி, கடனா நதி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பாபநாசம், சேர்வலாறு பகுதியில் லேசான மழை பெய்தது.

சுரண்டை, சாம்பவர் வடகரை, வீரகேரளம்புதூர், வீராணம், சேர்ந்தமரம், வெள்ளக்கால், சுந்தரபாண்டியபுரம், கீழப்பாவூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. சாம்பவர் வடகரை மெயின் ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. மேலும் சுரண்டை பகுதியில் மின்னல் தாக்கியதில் 42 வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன.

செங்கோட்டை பகுதியில் பெய்த மழையால் குண்டாறு பாலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இந்த மரம் விழுந்ததில் அங்கு நின்றிருந்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. உயர் அழுத்த மின் கம்பிகளும் துண்டிக்கப்பட்டு சாலையில் விழுந்தன. இதனால் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கோட்டை அருகே உள்ள கொட்டாகுளத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வறண்ட வானிலையே நிலவியது. மாலையில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மெயின் அருவியில் நேற்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.

வறண்டு கிடந்த ஐந்தருவியிலும் தண்ணீர் விழுந்தது. நேற்று பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளுக்கு சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Next Story