பரமத்திவேலூர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு - குளிக்க சென்றபோது பரிதாபம்


பரமத்திவேலூர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு - குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 24 April 2019 5:00 AM IST (Updated: 24 April 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள், சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). புகைப்படக் கலைஞரான இவர் அங்கு போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜோதிமணி (40). இவர்களுக்கு தாரகேஷ் (12), தீபகேஷ் (12) என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் இரட்டை குழந்தைகள் ஆவார்கள். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளனர்.

ஜோதிமணியும், ஜேடர் பாளையத்தை சேர்ந்த தேவிஸ்ரீயும் (32) தோழிகள். தற்போது தேவிஸ்ரீ சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள தனது கணவர் கார்த்திக்குடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஹஸ்விகா (8) என்ற மகள் இருந்தாள்.

இந்த நிலையில் நேற்று தேவிஸ்ரீ தனது மகள் ஹஸ்விகாவுடன் பொத்தனூரில் உள்ள ஜோதிமணி வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். பின்னர் காலை 9 மணி அளவில் சரவணன் குடும்பத்தினர் மற்றும் தேவிஸ்ரீ, அவரது மகள் ஹஸ்விகா ஆகியோரும், சரவணனின் அண்ணன் தனசேகரனின் மகன் ரோகித் (12) என்ற சிறுவனும் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

அங்கு ரோகித் உடைமைகளை கவனித்து கொண்டு கரையில் அமர்ந்து இருந்தான். சரவணன் உள்ளிட்ட 6 பேரும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது தாரகேஷ், தீபகேஷ் மற்றும் ஹஸ்விகா ஆகியோர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்த அவர்களை காப்பாற்ற சரவணன் மற்றும் ஜோதிமணி, தேவிஸ்ரீ ஆகியோரும் ஆழமான பகுதிக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். சரவணன் உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் ரோகித் இதுகுறித்து செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தான்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த உறவினர்கள் பரமத்திவேலூர் போலீசாருக்கும், வேலாயுதம்பாளையம் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஒவ்வொரு உடலாக 5 பேரின் உடல்களையும் மீட்டனர். சிறுமி ஹஸ்விகா உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பின்னர் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். இதேபோல பி.ஆர்.சுந்தரம் எம்.பி., நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் ஆகியோரும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் காவிரி ஆற்றுக்கு திரண்டு வந்த உறவினர்கள் இறந்தவர்களின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story