திண்டுக்கல்லில் துணிகரம், மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகை-பணம் திருட்டு


திண்டுக்கல்லில் துணிகரம், மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 April 2019 4:15 AM IST (Updated: 24 April 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி, 

திண்டுக்கல் சுப்புராமன்பட்டறை அருகே உள்ள சக்திநகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 40). இவர் தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது மனைவி தங்கரேகா மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகை, பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றனர். நேற்று அதிகாலை நாராயணமூர்த்தி குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 500 திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் நாராயணமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது.

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story