ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது பஸ் மோதல்; மாணவர்கள் உள்பட 5 பேர் காயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதியது. இதில் 2 மாணவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு அந்த பள்ளியின் வேன் ஒன்று நேற்று காலை வந்துகொண்டு இருந்தது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் அருகே வந்தபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பள்ளி வேனின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
5 பேர் காயம்
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. வேனின் பின்புறமும் சேதம் அடைந்தது. வேனில் பயணம் செய்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர்கள் தர்ஷன் (வயது 10), அமல்சிங் (16), பள்ளி ஊழியர்கள் ராமு (26), மணிகண்டன் (25), அரசு பஸ்சில் பயணம் செய்த சென்னை அயனாவரத்தை சேர்ந்த லலிதா (56) ஆகியோர் காயம் அடைந்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் தண்டலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story