குலசேகரன்பட்டினம் கடலில் பிணமாக கரை ஒதுங்கிய மாணவன் அடையாளம் தெரிந்தது ஆழமான பகுதியில் குளித்தபோது பலியான பரிதாபம்


குலசேகரன்பட்டினம் கடலில் பிணமாக கரை ஒதுங்கிய மாணவன் அடையாளம் தெரிந்தது ஆழமான பகுதியில் குளித்தபோது பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 23 April 2019 9:45 PM GMT (Updated: 23 April 2019 8:11 PM GMT)

குலசேகரன்பட்டினம் கடலில் கரை ஒதுங்கிய பள்ளி மாணவன் பிணம் நேற்று அடையாளம் தெரிந்தது. குளிக்க சென்ற உடன்குடி பள்ளி மாணவன், ஆழமான பகுதிக்கு சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடற்கரை பூங்கா அருகில் நேற்று முன்தினம் காலையில் 13 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவன் அரக்கு நிற கால்சட்டை அணிந்த நிலையில் கடலில் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று, இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடலில் பிணமாக கரை ஒதுங்கிய சிறுவன், உடன்குடி புதுமனையைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் ரூபன் ஆரோன் (13) என்பது தெரிய வந்தது. பாக்கியராஜ் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள். இவர்களில் இளைய மகனான ரூபன் ஆரோன், உடன்குடி கிறிஸ்தியாநகரம் தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 20-ந்தேதி ரூபன் ஆரோன் தன்னுடைய நண்பர்களுடன் குலசேகரன்பட்டினம் கடலில் குளிக்க சென்றான். அப்போது ரூபன் ஆரோன் கடலில் ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். ஆனால் நீண்ட நேரமாகியும் ரூபன் ஆரோன் கரைக்கு திரும்பி வராததால், அவன் வீட்டுக்கு திரும்பி சென்று இருக்கலாம் என்று கருதி நண்பர்கள் சென்று விட்டனர். ரூபன் ஆரோனின் பெற்றோரும் தங்களுடைய மகன், பள்ளி விடுமுறைக்காக உறவினரின் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று கருதி தேடி வந்தனர். இந்த நிலையில் ரூபன் ஆரோன் கடலில் மூழ்கி இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரூபன் ஆரோனின் உடலை குடும்பத்தினர் பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.

Next Story