மலைப்பாதையில் சென்றபோது பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி, பயணிகளை பத்திரமாக சேர்த்த சாமர்த்தியம்


மலைப்பாதையில் சென்றபோது பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி, பயணிகளை பத்திரமாக சேர்த்த சாமர்த்தியம்
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

மலைப்பாதையில் சென்றபோது பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இருப்பினும் அவர் சாமர்த்தியமாக இயக்கியதால் பயணிகள் உயிர் தப்பினர். மயங்கி விழுந்த டிரைவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குன்னூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை 9.45 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 64 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சின்னசாமி (வயது 48) என்பவர் ஓட்டினார். இருளப்பன் என்பவர் கண்டக்டராக பணியாற்றினார்.

பிற்பகல் 2.30 மணியளவில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவர் சின்னசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

வலியால் துடித்த அவர் மிகவும் சிரமத்துடன் கொட்டும் மழையிலும் பஸ்சை சாமர்த்தியமாக இயக்கி குன்னூர் வரை பத்திரமாக பயணிகளை கொண்டு வந்து சேர்ந்தார். பின்னர் மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் சின்னசாமியை உடனடியாக மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பஸ்சில் வந்த பயணிகள் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். உடல் நலம் குறைவு ஏற்பட்டும் அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை இயக்கியதால் 64 பயணிகள் உயிர் தப்பினர்.

Next Story