கணவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்க முயன்ற பென் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு
கணவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு உருவானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வீரசோழன் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மது போதைக்கு அடிமையான கருப்பையா தினசரி மகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஸ்வரி வீரசோழன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார்.
புகார் மனு ஏதும் எழுதாத நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நின்ற அவர் போலீசாரை கண்டித்து திடீரென்று தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து சூலக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.