அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருந்துகள் அடங்கிய சஞ்சீவி பெட்டகத்தை வழங்கக்கோரி வழக்கு


அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருந்துகள் அடங்கிய சஞ்சீவி பெட்டகத்தை வழங்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 23 April 2019 10:00 PM GMT (Updated: 23 April 2019 8:25 PM GMT)

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருந்துகள் அடங்கிய சஞ்சீவி பெட்டகத்தை வழங்கக்கோரிய வழக்கில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

பிரசவிக்கும் பெண்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்க ரூ.5 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்படுவதாக கடந்த 2016–ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. பிரசவத்தின்போது தாயையும், குழந்தையையும் காக்கும் வகையில் சித்த மருத்துவ பொருட்களை கொண்ட இந்த பெட்டகம் வழங்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில், பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மாதுளை மணப்பாகு, கருவேப்பிலை பொடி, இரும்பு லேகியம், ஏலாதி சூரண மாத்திரை, பாவன பஞ்சங்குல தைலம், உளுந்து தைலம், சதாவேரி லேகியம் உள்ளிட்ட மருந்துகள் கொண்ட அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை, வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் பெற விண்ணப்பித்தோம். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு இல்லை என்பதால் மகப்பேறு பெட்டகம் வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 1,800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் 700 நிலையங்களில் மட்டுமே சித்த மருத்துவ பிரிவுகள் உள்ளன.

இதனால் சித்த மருத்துவப் பிரிவு இல்லாத பகுதிகளில் இருக்கும் ஏழை தாய்மார்கள் மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை பெற முடியவில்லை. எனவே தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியம் ஆஜராகி, “அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சத்து 70 ஆயிரம் பிரசவம் நடக்கிறது. அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை முறையாக பயன்படுத்தும் கர்ப்பிணிகளில் 70 சதவீதம் பேருக்கு சுக பிரசவமும், அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் 80 சதவீத குழந்தைகள் முழுமையான ஆரோக்கியத்துடன் உள்ளன. எனவே சித்த மருந்துகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கர்ப்பிணிகளுக்கு சஞ்சீவி பெட்டகம் கிடைக்கச்செய்ய வேண்டும்“ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை இன்று (புதன்கிழமை) ஒத்திவைத்தனர்.


Next Story