செங்கம் அருகே, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - அரசு பஸ் சிறைபிடிப்பு


செங்கம் அருகே, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 24 April 2019 4:29 AM IST (Updated: 24 April 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சும் சிறைபிடிக்கப்பட்டது.

செங்கம், 

செங்கம் அருகே உள்ள தாழையூத்து ஊராட்சியில் கடந்த சில தினங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து குடிநீர் வினியோகம் சரிவர செய்யாததால் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காலிகுடங்களுடன் செங்கம் தாழையூத்து சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செங்கம் தாசில்தார் ஏ.வி.பார்த்தசாரதி, துணை தாசில்தார் துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோடைகாலம் தொடங்கி குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் கிராம ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், பழுதான நிலையில் உள்ள மின்மோட்டார்கள் உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே பழுது நீக்கி சரி செய்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story