பாணாவரம் அருகே பயங்கரம், தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் - போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
பாணாவரம் அருகே தந்தையை மகனே குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். அடக்கம் செய்ய முயன்ற உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பனப்பாக்கம்,
பாணாவரத்தை அடுத்த பள்ளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 85). விவசாயி. இவரது மனைவி ரத்தினம் (75). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதேபகுதியில் வசித்து வருகின்றனர். இதில் 2-வது மகன் ஏழுமலைக்கும் (39), தந்தை பஞ்சாட்சரத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அதேபகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பஞ்சாட்சரம் நேற்று பிற்பகலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை, தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஏழுமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தையின் மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் குடல் சரிந்து பஞ்சாட்சரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் போலீசாருக்கு தெரியாமல் பஞ்சாட்சரத்தின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இது குறித்து அறிந்த பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பஞ்சாட்சரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலைக்கு சொத்து தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story