மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. சின்னம் பட்டன் மாயமாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை? கடலூர் மாவட்ட கலெக்டர் பதில்
பண்ருட்டி அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. சின்னத்தின் பட்டன் மாயமாக காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பதில் அளித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்தது. அன்று பண்ருட்டியை அடுத்த திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 210-ம் எண் வாக்குச்சாவடியில் இளம் வாக்காளர் ஒருவர் தனது முதல் வாக்கை பதிவு செய்ய சென்றார்.
அப்போது அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அ.ம.மு.க. சின்னத்தின் பட்டன் இல்லை. இது பற்றி அவர் வாக்குச்சாவடி அலுவலரிடம் தகவல் தெரிவித்தார். உடனே வாக்குச்சாவடி அலுவலரும், வேட்பாளர்களின் முகவர்களும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஆய்வு செய்த போது, சின்னத்தின் பட்டன் மாயமாகி இருந்ததை அறிந்தனர்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி விட்டு புதிய எந்திரத்தை வைத்தனர். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை தொடரக்கூடாது, வாக்குப் பதிவை ரத்து செய்து விட்டு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வேட்பாளர் வலியுறுத்தினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு, மீண்டும் 2½ மணிநேரம் கழித்து வாக்குப்பதிவு நடந்தது. இது பற்றி மாவட்ட கலெக்டர் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பினார். இதேபோல் தேர்தல் பொது பார்வையாளரும் தனியாக அறிக்கை அனுப்பினார். இதற்கிடையே அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதற்கிடையே அந்த வாக்குச்சாவடி மையத்தில் பணியின் போது வாக்குச்சாவடி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கவன குறைவாக இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.
இது பற்றி கலெக்டர் அன்புசெல்வனிடம் கேட்ட போது, திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கடலூர் தொகுதியில் சின்னம் பொருத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு அலுவலர்கள் காரணம். இருப்பினும் இது பற்றி நானும், பொது பார்வையாளரும் மாநில தேர்தல் அதிகாரிக்கு தனித்தனியாக அறிக்கை அனுப்பி உள்ளோம். தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கிறதோ? அதை பொருத்து இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதை முடிவு செய்வோம் என்றார்.
Related Tags :
Next Story