விழுப்புரம் நகரில், மந்தகதியில் நடக்கும் வாய்க்கால் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல் - மாற்று நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
விழுப்புரம் நகரில் மந்தமாக நடந்து வரும் வாய்க்கால் சீரமைப்பு பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு செய்ய போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரம் விரிவு படுத்தப்பட்டபோதிலும் தீராத பெரும் பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. கடலூர், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நகரத்திற்கு வர கிழக்கு புதுச்சேரி சாலை, நேருஜி சாலை என ஒரே வழியிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறுகலான இந்த சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துதல், நடைபாதைகளில் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்தல் போன்ற காரணங்களால் தினம், தினம் விழுப்புரம் நகரத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் வரை வாகனங்களில் செல்வதற்கு சுமார் 20 நிமிடத்திற்கு மேலாகிறது. அந்தளவிற்கு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதுவும் காலை பள்ளி தொடங்கும் நேரத்திலும், மாலையில் பள்ளி முடிவடையும் நேரத்திலும் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் விழுப்புரம் நகர மக்கள் மட்டுமின்றி வெளியூர் செல்லும் பொதுமக்களும் சிக்கி பெரும் அவதிப்படுகின்றனர்.
இந்த போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு இதுநாள் வரையிலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நான்குமுனை சந்திப்பில் இருந்து பானாம்பட்டு சாலை சந்திப்பு வரை சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாக இந்த சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
மந்தமாக...
இப்பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் மிகவும் வேகமாக இந்த பணிகள் நடந்து வந்தது. ஒருபுறம் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிற நிலையில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வாய்க்கால் சீரமைக்கும் பணி முடிவடையாமல் மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது.
இதனால் சாலை விரிவாக்க பணியையும் விரைந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது. ஒவ்வொரு கடையின் முன்பும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தினால் வியாபார நிறுவனங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் இந்த சாலை ஏற்கனவே குறுகலாக இருந்த நிலையில் தற்போது தோண்டப்பட்ட பள்ளத்தினால் அதைவிட மிகவும் குறுகலாக மாறி விட்டதால் நகரில் முன்பு இருந்ததை விட இப்போது போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே சாலையில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிற நிலையில் தினம், தினம் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிப்பதால் சில சமயங்களில் அவர்கள் மிகவும் சோர்வடைந்து மயங்கி கீழே விழும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி வாய்க்கால் சீரமைப்பு பணியையும், சாலை விரிவாக்க பணியையும் தொய்வில்லாமல் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதாவது கடலூர், பண்ருட்டி, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்துமிஷின் மருத்துவமனை சாலை, ரங்கநாதன் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு திருப்பி விட வேண்டும். அதுபோல் விழுப்புரம் கே.கே.சாலையை ஒருவழிச்சாலையாக மாற்ற வேண்டும். இது தவிர விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி மாரியம்மன் கோவில் அருகில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்தை முறைப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story