வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை தேர்தல் அதிகாரி அன்பழகன் எச்சரிக்கை


வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை தேர்தல் அதிகாரி அன்பழகன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 April 2019 4:35 AM IST (Updated: 24 April 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் எச்சரித்துள்ளார்.

கரூர்,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் தலைமையில் பறக்கும்படை, நிலையான ஆய்வு குழுவினர், தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம அரவக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, நிலையான குழுவினர் என 200 பேர் கொண்ட 58 குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிற பகுதிகளில் இருந்து அரவக்குறிச்சி தொகுதிக்குள் வருவதற்காக உள்ள 21 வழிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணமோ அல்லது பொருளோ கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுப்பது கண்டறியப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 171 (பி) மற்றும் 171 (சி)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்ல இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அதற்குமேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் துணை கலெக்டர் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஈஸ்வரன், அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story