கர்நாடகத்தில் 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 67.21 சதவீத வாக்குகள் பதிவு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


கர்நாடகத்தில் 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 67.21 சதவீத வாக்குகள் பதிவு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 April 2019 5:29 AM IST (Updated: 24 April 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2-ம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 67.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நேற்று பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல்கட்டமாக கடந்த 18-ந் தேதி 14 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக மீதமுள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று(அதாவது நேற்று) தேர்தல் நடந்தது. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இரவு 7 மணி நிலவரப்படி 2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 67.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. 2-ம் கட்ட தேர்தலில் 12 இடங்களில் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித் தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து 12 இடங்களிலும் இருந்தவர்கள் வாக்களித்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 67.20 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த முறை 2 கட்டங்களாக நடந்த தேர்தலில் சராசரியாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கர்நாடகத்தில் முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் பணியில் ஈடுபட்ட 7 ஊழியர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். இவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

கலபுரகி காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தனது மனைவியுடன் சேர்ந்து வாக்குச்சாவடியில் ஒரே நேரத்தில் வாக்களித்துள்ளார். இவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story