சட்டவிரோதமாக தொலைதூர ரெயில் டிக்கெட் விற்ற 18 பேர் கைது 3,200 டிக்கெட்டுகள் பறிமுதல்


சட்டவிரோதமாக தொலைதூர ரெயில் டிக்கெட் விற்ற 18 பேர் கைது 3,200 டிக்கெட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 April 2019 5:54 AM IST (Updated: 24 April 2019 5:54 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக தொலைதூர ரெயில் டிக்கெட்டுகளை விற்று வந்த 18 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 200 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மும்பை,

கோடைகால விடுமுறையை யொட்டி பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதை பயன்படுத்தி தொலைதூர ரெயில் டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக முன்பதிவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரெயில்வே சிறப்பு படை பிரிவுக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், காட்கோபரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் முகமது ஆசான்(வயது38) என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள முன்பதிவு ரெயில் டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக இணைய தள சாப்ட்வேரை உபயோகப்படுத்தி 40 விநாடிகளில் ஏராளமான ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதனை அதிகவிலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த மோசடியில் தொடர்புடைய பொய்சரை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள முன்பதிவு ரெயில் டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையில் பல இடங்களில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளர்களுக்கும், இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் இந்த மோசடியில் தொடர்புடைய பாந்திராவை சேர்ந்த சிரிஷ் சிங், பவாயை சேர்ந்த வினோத் யாதவ், கோரேகாவை சேர்ந்த ராமாசாரே, லால்ஜி சாகானி, ராஜேஷ், விக்ரோலியை சேர்ந்த அருண் குமார், மலாடை சேர்ந்த ஆச்சரியா, சந்தன் குப்தா, போரிவிலியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஜோகேஸ்வரியை சேர்ந்த பிரதிப் யாதவ், காஞ்சன் யாதவ், காந்திவிலியை சேர்ந்த லஷ்மிகாந்த் பட்டேல், பயந்தரை சேர்ந்த புக்ராஜ் காலேட், நாலச்சோப்ராவை சேர்ந்த சுரேஷ் குப்தா உள்பட 18 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 200 முன்பதிவு டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.


Next Story