நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்ய கிராம, நகர்ப்புற அரசு செவிலியர்களுக்கு ‘டேப்லெட்’ பயிற்சி


நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்ய கிராம, நகர்ப்புற அரசு செவிலியர்களுக்கு ‘டேப்லெட்’ பயிற்சி
x
தினத்தந்தி 25 April 2019 3:30 AM IST (Updated: 24 April 2019 5:28 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள 72 கிராம, நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நோயாளிகளின் விவரங்களை ஆன்–லைனில் ‘டேப்லெட்’ மூலம் பதிவு செய்வது குறித்துப் பயிற்சி நடந்தது.

வேலூர், 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த பதிவுகள் நவீன முறையில் ஆன்–லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ‘டேப்லெட்’ வழங்கப்பட்டு வருகிறது.

வேலூர் சுகாதார மாவட்டத்தில் முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் 9–ந் தேதி அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் பிரிவில் பணிபுரியும் 67 செவிலியர்களுக்கு மொபைல் வடிவிலான ‘டேப்லெட்’ வழங்கப்பட்டு, அதனை பயன்படுத்துவது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2–ம் கட்டமாக கிராமப்புற, நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நோயாளிகளின் விவரங்களை ஆன்–லைனில் ‘டேப்லெட்’ மூலம் பதிவு செய்வது குறித்துப் பயிற்சி வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.

பயிற்சிக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். புள்ளியியல் உதவி இயக்குனர் சுமதி பயிற்சி அளித்தார். வேலூர் சுகாதார மாவட்டத்தில் கிராமப்புற, நகர்ப்புற செவிலியர்கள் 72 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் அட்டை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி ‘டேப்லெட்’டில் பதிவு செய்வது குறித்தும், அதனை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு ‘டேப்லெட்’ வழங்கப்பட்டன.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில், ‘அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குச் செல்லும்போது அவர்களின் விவரங்களை அங்குள்ள ‘டேப்லெட்’டில் எளிதில் பெற முடியும். நோயாளிகள் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்ல தேவையில்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 394 செவிலியர்களுக்கும் ‘டேப்லெட்’ வழங்கப்பட உள்ளது’ என்றார்.


Next Story