சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்பு : உதவி கலெக்டர் நடவடிக்கை


சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்பு : உதவி கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 24 April 2019 6:03 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் கொத்தடிமைகள் இருப்பதாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி கலெக்டர் இளம்பகவத், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்–இன்ஸ்பெக்டர்கள் ரபேல்லூயிஸ், சுந்தரபாண்டியன், தொழிலாளர் துணை ஆய்வாளர் கமலா, உதவி ஆய்வாளர் அன்னபூரணி, கொத்தடிமைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மைய நிர்வாகிகள் சகுந்தலா, சம்பத், துரை ஆகியோர் நேற்று காரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஜெயலலிதா (வயது 60) என்பவரின் சவுக்கு தோப்புக்கு சென்றனர்.

அங்கு வளர்புரம் கிராமம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 57), அவரது மனைவி அங்கம்மாள் (50), மகன் பாளையம் (19) ஆகியோர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் மீட்டு அரக்கோணம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் சண்முகம் உதவி கலெக்டரிடம் கூறியதாவது:–

நான், எனது மனைவி ஆகிய 2 பேரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஜெயலலிதா என்பவரிடம் ரூ.1½ லட்சம் முன்பணம் வாங்கி கொண்டு வேலைக்கு வந்தோம். எனது மகன் பாளையம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக வேலைக்கு வந்தான். எனக்கு தினமும் ரூ.200–ம், எனது மனைவி, மகனுக்கு தலா 100 ரூபாயும் கூலி கொடுத்து வந்தனர்.

நாங்கள் சவுக்கு தோப்பில் அனைத்து வேலைகளும் செய்து வந்தோம். அவ்வப்போது நான் பணம் வாங்கி உள்ளேன். தற்போது நாங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டால் ஜெயலலிதா, நீங்கள் வாங்கிய கடன் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் உள்ளது. அந்த பணத்தை வேலை செய்து கழித்து விட்டு செல்லுங்கள் என்று கூறினார். மேலும் தற்போது வேலை செய்தாலும் கூலி தருவதில்லை. கூலி பணத்தை கடனில் கழித்து கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் உதவி கலெக்டர் இளம்பகவத் கொத்தடிமையாக சண்முகம், அங்கம்மாள், பாளையம் ஆகியோரின் கடன்தொகை ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அதற்கான சான்றிதழை அவர்களிடம் வழங்கினார்.

கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட சண்முகம் குடுபத்திற்கு அரசு உதவியாக அரிசி, மண்எண்ணெய், வேட்டி, சேலை ஆகியவற்றை உதவி கலெக்டர் வழங்கினார். மேலும் இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story