சித்தோட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு


சித்தோட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

சித்தோட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம் மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணும் நாளன்று இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வாக்கும் எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடையின்றி குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காசிலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், தேர்தல் தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story