நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்


நடத்தையில் சந்தேகம் தாயை எரித்து கொன்ற மகன்
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 7:18 PM GMT)

வண்டலூர் அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து தாயை எரித்துக்கொன்ற மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் வைரமணி. இவரது மனைவி சாந்தி (வயது 46). கணவர் இறந்துவிட்டார். தற்போது மகன் ஆனந்தராஜுடன் (26) வசித்து வந்தார். ஆனந்தராஜ் கொளப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஊனமாஞ்சேரி ஏரிக்கரை ஓரமாக உடல் முழுவதும் எரிந்த நிலையில் சாந்தி பிணமாக கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சாந்தி கரிக்கட்டையாக எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். சாந்தியின் உடல் அருகே அவரது மாற்றத்திறனாளி தம்பி மணிகண்டன் (40) தலையில் தீக்காயத்துடன் அமர்ந்திருந்தார். மணிகண்டனை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் சாந்தியின் மகன் ஆனந்தராஜை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆனந்தராஜ் நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வேலை முடிந்து மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆண் நபருடன் பேசி கொண்டிருந்தார். இதனை பார்த்த ஆனந்தராஜ் நடத்தையில் சந்தேகம் அடைந்து தனது தாயிடம் இந்த நேரத்தில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்த தாய் சாந்தி இறந்துவிட்டதாக நினைத்து தனது தாயின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு கொண்டு சென்று உடலை ஏரியில் போட்டு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சாந்தியின் தம்பி மணிகண்டன் ஆனந்தராஜ் தனது தாயை பெட்ரோல் ஊற்றி எரிப்பதை பார்த்து விட்டார். இதனை கவனித்த ஆனந்தராஜ் தாயை எரித்துக்கொலை செய்வதை தாய்மாமா மணிகண்டன் மற்றவர்களிடம் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அவரது தலையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் மணிகண்டன் தலையில் தீக்காயம் அடைந்து இரவு முழுவதும் தனது சகோதரி சாந்தியின் உடல் அருகே அமர்ந்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயை மகன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஊனமாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story