11 விவசாயிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததால் எண்ணெய் குழாய் பதிப்பது குறித்த சமாதான கூட்டம் புறக்கணிப்பு


11 விவசாயிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததால் எண்ணெய் குழாய் பதிப்பது குறித்த சமாதான கூட்டம் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

எண்ணெய் குழாய் பதிப்பது குறித்து 11 விவசாயிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததால் சமாதான கூட்டத்தை புறக்கணித்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கீழசட்டநாதபுரம், நாங்கூர், ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் கெயில் எண்ணெய் நிறுவனம் சார்பில் ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் குழாய்கள் பதிக்கும் பணியை தடுத்தி நிறுத்தி கடந்த 13-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தாசில்தார் சபிதாதேவி மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். மேலும் குழாய்கள் பதிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்த சமாதான கூட்டம் நேற்று சீர்காழி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சபிதாதேவி தலைமையில் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, கெயில் நிறுவன பொது மேலாளர் விஸ்வநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, சுப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த செழியன், ராஜ்மோகன், மணி, மாமல்லன், ராமலிங்கம், சிவகடாச்சம், அன்பு, செல்வம், தமிழ்வேந்தன், முருகன், விஸ்வநாதன் ஆகிய 11 விவசாயிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததின் பேரில் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த விவசாயிகள், கீழசட்டநாதபுரம், நாங்கூர், ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் எண்ணெய் நிறுவனம் சார்பில் குழாய்கள் பதிப்பது குறித்து எங்களிடம் மட்டும் கருத்து கேட்கக்கூடாது சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் கிராமத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்தனர்.

அப்போது நிலம் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் இரணியன் என்பவர் கூறியதாவது:-

மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் எண்ணெய் குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை காவல்துறை உதவியோடு எண்ணெய் நிறுவனம் தடுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாங்கூரில் விவசாயிகள் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் சபிதாதேவி தேர்தலுக்கு பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று கூறினார். ஆனால் தற்போது 11 விவசாயிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்க வேண்டும். பொதுமக்களை புறக்கணித்துவிட்டு வெறும் 11 விவசாயிகளை வைத்து கருத்து கேட்கும் கூட்டம் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவான கூட்டமாகும்.

இதனால் 11 விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர். மாதானம் முதல் மேமாத்தூர் வரை எண்ணெய் நிறுவனம் விவசாயிகளிடம் முறையாக கருத்து கேட்க வேண்டும். மக்கள் போராடி கொண்டிருக்கும் போது அரசு கடலூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும், நாகை மாவட்டத்தில் 20 இடங்களிலும் ஆழ்குழாய் எண்ணெய் கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கியது கண்டிக்கதக்கது. எண்ணெய்குழாய் பதிக்கப்படுவதால் நிலத்தடிநீர், விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் இடங்களில் விவசாயிகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கூடாத வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Next Story