மின்சாரம் தாக்கி இறந்த காட்டுயானையின் உடல் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது


மின்சாரம் தாக்கி இறந்த காட்டுயானையின் உடல் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி இறந்த காட்டு யானையின் உடல் வனப்பகுதியில் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு அருகில் தனியார் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 22-ந் தேதி உணவு மற்றும் குடிநீர் தேடி வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு ஆய்வு செய் தனர்.

இதை தொடர்ந்து தாயனூர் அரசு வன கால்நடை டாக்டர் வேணுகோபால் முன்னிலையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் யானையின் உடல் டிப்பர் லாரி மூலம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காராச்சி- மரக்குட்டை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் பின்னர் தற்போது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள பாரு இன கழுகுகள் மற்றும் பிற வன விலங்குகளின் இரைக்காக யானையில் உடல் கிரேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு அந்த பகுதியில் வீசப்பட்டது. இதுவரை வனப்பகுதியில் இறந்த யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்தந்த வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்படும். ஆனால் தற்போது முதல்முறையாக யானையின் உடல் வனப்பகுதியில் உள்ள கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வனப்பகுதிகளில் உள்ள மின்சார வேலியில் சிக்கி யானைகள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வனப்பகுதியில் யானைகள் உள்பட காட்டு விலங்குகளின் உயிரிழப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story